உள்ளூர் செய்திகள்

மாம்பழம் வரத்து 40 டன்னாக அதிகரிப்பு: விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

Published On 2024-05-31 05:32 GMT   |   Update On 2024-05-31 05:32 GMT
  • சேலம் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு.
  • இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

குறிப்பாக சேலம் மாவட்டம் ஆத்தூர், வாழப்பாடி, காரிப்பட்டி, குப்பனூர், கூட்டாத்து ப்பட்டி, வரகம்பாடி, அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, ஜலகண்டா புரம், எடப்பாடி மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த மாம்பழங்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். மேலும் ஆன்லைனிலும் உலகம் முழுவதும் இந்த மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

வழக்கமாக மார்ச் மாதம் மாத மத்தியில் இருந்து ஆகஸ்டு மாதம் வரை மாம்பழங்கள் வரத்து சேலம் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் இருக்கும். ஆனால் இந்தாண்டு பருவம் தவறி பெய்த மழையால் மாங்காய் உற்பத்தி கடுமையாக குறைந்தது. இதனால் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாங்காய் வரத்து குறைவாக இருந்தது.

இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து மாம்பழ வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது சீசன் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் சேலம் கடை வீதிகளில் உள்ள கடைகளில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சேலம் -பெங்களூரா, சேலம் குண்டு, அல்போன்சா, மல்கோவா, நீலம், இமாம்பசந்த், பங்கணப்பள்ளி , செந்தூரா, கிளிமூக்கு, குதாதத், உள்பட பல ரகங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளது.

சேலம் மார்க்கெட்டுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு 40 டன் அளவிற்கு மாம்பழங்கள் வரத்து உள்ளது. இதனால் சேலம் மாநகர தெருக்களில் மாம்பழ வாசம் வீச தொடங்கி உள்ளது.

சேலம் மாநகர தெருக்கள், ஏற்காடு சாலை, செவ்வாய்ப்பேட்டை கடை வீதி, அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் கடைகளிலும், தெருவோர தள்ளுவண்டிகளிலும் மாம்பழ விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் கடை வீதிகளிலும், சேலம் மாநகர தெருக்களிலும் மாம்பழ வாசம் கம, கமக்க தொடங்கி உள்ளது.

ேசலம் கடை வீதியில் மாம்பழங்கள் தற்போது ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. கடந்த ஆண்டை விட விலை சற்று அதிகமாக இருந்தாலும் கடந்த வாரத்தை விட தற்போது விலை குறைந்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், சேலம் மார்க்கெட்டுகளில் கடந்த ஆண்டு இதே நாளில் 50 டன் வரை மாம்பழங்கள் வரத்து இருந்தது. ஆனால் இந்தாண்டு தற்போது மாம்பழ வரத்து 40 டன்னாக உள்ளது. தற்போது மாம்பழ சீசன் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது விலை குறைந்துள்ளது, இனி வரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News