பொங்கலுக்கு மண்பானை கொள்முதல் செய்து மக்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும்
- கலெக்டர் அலுவலகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் மனு
- மழைக்கால நிவாரண நிதியை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டுகோள்
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடந்தது.
கூட்டத்தில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர்.
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தி னர் மண்பானை, அடுப்புடன் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் விழாவின் போது விவசாயிகளின் நலனுக்காக அரிசி, பருப்பு, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களும், நெசவாளர்கள் நலன் காக்க வேட்டி, சேலையும் தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. இதேபோன்று, அழிந்து வரும் மண்பாண்ட தொழிலை காக்கவும், மண்பாண்ட தொழிலாளர்கள் நலன் காக்க அரிசியை புது பானையில் பொங்கலிட களிமண்ணால் ஆன ஒரு பானையும், ஒரு அடுப்பும் தமிழக அரசு கொள்முதல் செய்து இலவசமாக அளிக்க வேண்டும்.
எங்கள் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறோம்.
மேலும், மழைக்கால நிவாரண நிதியை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் ஆணை வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலா ளர்கள் மண் பாண்டங்கள் செய்வதற்குரிய களி மண்ணை எடுத்துக் கொள்ள கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்ற அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசிற்கும், முதல்-அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
கோவை மாநகராட்சி 41-வது வார்டு கவுன்சிலர் சாந்தி தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில், கோவை பி.என்.புதூர் மருதமலை ரோட்டில் மயானத்திற்கு பின்புறம் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.
நீலிகோணம்பாளையம் விநாயகர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தட்சன் தோட்டம் விநாயகர் நகர் ெரயில்வே லைன் அருகே அதிகளவில் குப்பைகளை கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் முதியோர், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.