அன்னூர் அருகே வீட்டில் மின்சாரத்தை துண்டித்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி கொள்ளையர்கள்
- கொள்ளை போன அதே வீட்டில் மீண்டும் கைவரிசை
- பெண் சத்தம் போட்டதால் தப்பி ஓட்டம்
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி புஷ்பலதா(வயது 45).
சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டின் கதவுகளை பூட்டி விட்டு அயர்ந்து தூங்கினர். நள்ளிரவு 2.25 மணியளவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கண் விழித்த புஷ்பலதா ஜன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்தார். அப்போது பக்கத்து வீடுகளில் மின்சாரம் இருந்தது.
இதன் காரணமாக சந்தேகம் அடைந்த அவர் வீட்டில் உள்ள மின்சார பெட்டியை பார்த்தார். அப்போது அங்கு முகமூடி அணிந்தபடி 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த புஷ்ப லதா திருடன்.... திருடன்.... என சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவ தற்குள் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.
பின்னர் அவர் வெளியே வந்து பார்த்த போது முகமூடி அணிந்து வந்த 2 வாலிபர்கள் வீட்டின் மின்சாரத்தை துண்டித்து விட்டு கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கொள்ளையடிக்க வந்த வாலிபர்கள் பக்கத்து வீட்டை சேர்ந்த முருகேஷ் என்பவரது வீட்டில் 2 செல்போன்களை திருடி சென்றது தெரிய வந்தது.
ஏற்கனவே புஷ்பலதா வீட்டில் கடந்த 2017-ம் ஆண்டு இதே போல மர்மநபர்கள் 11 பவுன் தங்க நகைகளை கொள்ளை யடித்து சென்றனர். அந்த வழக்கில் இன்னும் கொள்ளையர்கள் பிடிபடாத நிலையில் தற்போது 2 வாலிபர் கொள்ளையடிக்க வந்துள்ளனர்.
இது குறித்து புஷ்பலதா அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் மின்சாரத்தை துண்டித்து கொள்ளையடிக்க வந்த முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.