கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை- நெல்லையில், ஏ.டி.எம். எந்திரங்களில் கிருமி நாசினி தெளிப்பு
- நெல்லை மாநகர பகுதியில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டது.
- மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்க கமிஷனர் உத்தரவிட்டிருந்தார்.
நெல்லை:
நெல்லையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாநகர பகுதியில் 2 பேருக்கும், ராதாபுரம், அம்பை பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்நிலையில் மாநகர பகுதியில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவின் பேரில் முடுக்கி விடப்பட்டது. இதையடுத்து மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமை யில் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் கமிஷனர் தலைமையில் நடந்த கூட்டத்தின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவிட்டிருந்தார்.
அந்த வகையில் இன்று மாநகரப் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் கிருமிநாசினி அடிக்கப்பட்டது. மேலும் மாநகர பகுதியில் 4 மண்டலங்களிலும் உள்ள ஏ.டி.எம்.களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் பஸ் நிலையங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே மாநகர பகுதியில் சந்திப்பு சரணாலயத்தில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சந்திப்பு உதவி போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் தனிமையில் உள்ளார்.