திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களின் நலனுக்காக மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்- சுகாதாரதுறை அமைச்சருக்கு த.மா.கா. கோரிக்கை
- பக்தர்களின் நலன் கருதி 50 கி.மீ. தொலைவு இடைவெளியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட வேண்டும்.
- பழனி கோவிலில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் செயல்பட்டன.
ஆறுமுகநேரி:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான ஆறுமுகநேரி தங்கமணி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு விழாக்காலங்களில் தினமும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் மேலூர், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, செங்கோட்டை, தென்காசி போன்ற தொலைதூர பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வருகின்றனர். இவர்களின் நலன் கருதி 50 கி.மீ. தொலைவு இடைவெளியில் சித்த ஆயுர்வேத மருத்துவ முகாம் அமைக்கப்பட வேண்டும். தற்போது நடந்து முடிந்த பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு இதுபோன்று பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் செயல்பட்டன. இது பாராட்டிற்கு உரியது.
எனவே மாசி திருவிழாவிற்கு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களின் வசதிக்காக பரமக்குடி, அருப்புக்கோட்டை, ஆறுமுக நேரி ஆகிய இடங்களிலும் ஆலங்குளம், நெல்லை, குரும்பூர் ஆகிய இடங்களிலும் வள்ளியூர், சாத்தான்குளம், பரமன்குறிச்சி ஆகிய இடங்களிலும் உவரி, குலசேக ரன்பட்டினம், ஆலந்தலை ஆகிய இடங்களிலும் மருத்துவ முகாம்களை அமைத்து செயல்படுத்த வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.