மருத்துவ படிப்பு 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்
- மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளை சேர்ந்த 437 பேர் நீட் தேர்வெழுதியதில் 215 பேர் தேர்ச்சி பெற்றனர்.
- எவ்வாறு விண்ணப்பிப்பது, இணையதளத்தில் அதற்கான வழிமுறைகள் என்னென்ன உள்ளன, எவ்வளவு நாட்களுக்குள், என்னென்ன ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.
திருப்பூர்:
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அழைப்பு விடுத்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளை சேர்ந்த 437 பேர் நீட் தேர்வெழுதியதில் 215 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கும் வகையில் எவ்வாறு ஆன்லைனில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம், திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா தலைமை வகித்தார். எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, இணையதளத்தில் அதற்கான வழிமுறைகள் என்னென்ன உள்ளன, எவ்வளவு நாட்களுக்குள், என்னென்ன ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். சுயநிதி மருத்துவம், பல் மருத்துவ கல்லூரிக்கான ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளிட்ட விபரங்களை மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் விளக்கினார்.
இதில் மாவட்டத்தில் நீட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவிகள் 90 பேர் பங்கேற்றனர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கு https://tnhealth.tn.gov.in/ https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் ஜூலை 10-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.