திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்- சுகாதாரகேடு ஏற்படும் அபாயம்
- மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள் அங்கு குவிந்து காணப்படுகிறது.
- கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினம் தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த ஆஸ்பத்திரியில் மகப்பேறுக்கு மட்டும் தனி கட்டிடம் ஒதுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்டிடத்திற்கு பின்புறம், மருத்துவனை முழுவதும் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள் அங்கு குவிந்து காணப்படுகிறது.
குறிப்பாக அறுவை சிகிச்சை செய்யும் கழிவுகள், மற்றும் அவசர சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருத்துவ பாதுகாப்பு கவச கழிவுகள் உள்ளிட்டவற்றை பணியாளர்கள் ஆங்காங்கே கொட்டுவதால் மருத்துவமனை முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. திருவள்ளூர் நகரத்தின் மையப் பகுதியில் உள்ள இந்த ஆஸ்பத்திரியில் மருத்துவ கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.