உள்ளூர் செய்திகள்

மெட்ரோ ரெயில் பணிகள்: தியாகராயநகர், நந்தனத்தில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

Published On 2022-11-11 02:57 GMT   |   Update On 2022-11-11 02:57 GMT
  • மெட்ரோ ரெயில் பணிகள் இருவேறு இடங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
  • போக்குவரத்து மாற்றம் ஒருவார காலம் அமலில் இருக்கும்.

சென்னை :

மெட்ரோ ரெயில் பணிகள் இருவேறு இடங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பனகல் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 12-ந்தேதி (நாளை) முதல் ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் சில போக்குவரத்து மாற்றங்களை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

தியாகராய சாலையில் தற்போதுள்ள ஒரு வழிப்பாதையில் இருந்து மாற்றப்பட்டு பனகல் பூங்காவில் இருந்து ம.பொ.சி.-க்கு செல்லலாம். தணிகாசலம் சாலை சந்திப்பில் இருந்து பனகல் பூங்காவுக்கு செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் தணிகாசலம் சாலை, வெங்கட்நாராயணா சாலை வழியாக உஸ்மான் சாலையை (பனகல் பார்க்) அடையலாம்.

உஸ்மான் சாலையில் இருந்து பாஷ்யம் சாலை வழியாக போத்தீசுக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

பர்கிட் சாலையில் இருந்து வரும் மாநகர பஸ்கள் தணிகாசலம் சாலை வழியாக செல்ல தடைசெய்யப்பட்டு சிவஞானம் சாலை, தியாகராயசாலை வழியாக திருப்பி பர்கிட் சிக்னலில் இருந்து வாகனங்கள் வெங்கட்நாராயணா சாலை வழியாக அண்ணாசாலைக்கு செல்ல தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட வாகனங்கள் இந்தி பிரசார சபா தெரு, சவுத் போக் சாலை, ம.பொ.சி. சந்திப்பு வந்து அண்ணாசாலையை அடையலாம்.

தியாகராயநகர் மேட்லியில் இருந்து பர்கிட் சாலை வழியாக அண்ணாசாலைக்கு வெங்கட்நாராயணா சாலை வழியாக செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மூப்பாரப்பன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணாசாலையை அடையலாம்.

நந்தனம் சந்திப்பில் இருந்து வெங்கட்நாராயணா சாலை வழியாக செல்லும் வாகனங்கள் பனகல் பூங்கா வரை வழக்கம் போல செல்லலாம்.

மேற்கண்ட தகவல் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News