மேட்டுப்பாளையத்தில் தோட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை
- 17 பார்கள் புதுப்பிக்காமல் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பணம் கட்டவில்லை
- போலீஸ் சோதனையில் 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் அரசு டாஸ்மாக் கடைகளில் டாஸ்மாக் பாரும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த டாஸ்மாக் பார்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு விடபட்ட நிலையில் காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் என 17 பார்கள் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் பாரை ஒப்பந்தம் எடுத்தவர்கள் சிலர் முறையாக புதுப்பிக்காமல் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பணம் கட்டவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 25-ந் தேதி மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகையில் உரிய பணம் செலுத்தாமல் செயல்பட்ட 10 பார்களுக்கு டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெள்ளியங்காடு பகுதியில் சீல் வைக்கபட்ட டாஸ்மாக் பாரில் உள்ளவர்கள் கள்ளத்தனமாக டாஸ்மாக் பாரின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வைத்து கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்தனர்.
இது தொடர்பாக காரமடை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு மது விற்பனை செய்தவர்களிடம் இருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை இதுபோன்று விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து விட்டு சென்றனர்.