உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 11 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2024-09-13 05:12 GMT   |   Update On 2024-09-13 05:12 GMT
  • மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பியது.
  • டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

சேலம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையும் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி நிரம்பியது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையின் காரணமாக மீண்டும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 619 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 11 ஆயிரத்து 631 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. மேலும் அணையின் நீர்மட்டம் 112.39 அடியாக இருந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 23 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது.

நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டாலும், அதை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது அணையில் 81.85 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News