கோவையில் எம்.ஜி.ஆர். படத்துடன் ஒட்டப்பட்ட விஜய் மாநாடு சுவரொட்டிகள்
- ஏராளமான தனியார் பஸ்கள், வேன்கள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.
- மாநாட்டுக்கு கோவை ரசிகர்கள் அணிவகுத்து செல்ல உள்ளனர்.
கோவை:
விக்கிரவாண்டியில் நாளை மறுநாள் (27-ந் தேதி) நடைபெறும் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பங்கேற்க விஜய் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.
நடிகர் விஜய்க்கு கொங்கு மண்டலமான கோவையில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் விக்கிரவாண்டி மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஏராளமான தனியார் பஸ்கள், வேன்கள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.
கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், துடியலூர் போன்ற இடங்களில் இருந்து வாகனங்கள் மாநாட்டுக்கு புறப்பட உள்ளன.
கட்சிக் கொடி ஏந்தி, தாரை-தப்பட்டை முழங்க மாநாட்டுக்கு கோவை ரசிகர்கள் அணிவகுத்து செல்ல உள்ளனர்.
இதற்கிடையே மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து கோவையில் பல இடங்களில் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் நகர் முழுக்க சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு உள்ளன. சுவரொட்டிகளில் மாநாடு தொடர்பாக பரபரப்பு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.
கோவை ரெயில்நிலையம் முன்பு அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களை கவரும் வகையில் உள்ளன.
அதில் மீண்டும் எம்.ஜி.ஆர் வருகிறார், மக்களாட்சி தருகிறார் என்ற வாசகம் இடம்பிடித்துள்ளது. சுவரொட்டியில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். படமும், விஜய் படமும் இடம்பெற்றுள்ளது.
எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர். சாட்டையை சுற்றுவது போல் தோன்றும் காட்சியும், அதேபோல் விஜய் சாட்டையை சுற்றுவது போன்று படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சுவரொட்டியில் தமிழகத்தின் எதிர்காலமே, நல்லாட்சியை எதிர்நோக்கும் இளைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரமே என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே மாநாடு நடைபெறும் மைதான முகப்பில் பெரியார், அண்ணா போன்ற தலைவர்களின் கட்-அவுட்டுகள் இடம்பெற்றுள்ள நிலையில் கோவையில் எம்.ஜி.ஆர். படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.