உள்ளூர் செய்திகள் (District)

விழாவில் மகளிருக்கு ஏ.டி.எம். கார்டுகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார். அருகில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் பலர் உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் புதிதாக 14,542 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை - ஏ.டி.எம்.கார்டுகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்

Published On 2023-11-11 04:52 GMT   |   Update On 2023-11-11 04:52 GMT
  • புதியதாக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டுகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.
  • 14,542 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட்டது.

தேனி:

தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் புதியதாக தேர்வு செய்யப்பட்ட 14,542 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டுகளை கலெக்டர் ஷஜீவனா முன்னிலையில் வழங்கினார்.

இதில் சரவணக்குமார் எம்.எல்.ஏ, மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது,

தேனி மாவட்டத்தில் 15.09.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தகுதியான பயனாளிகள் என தேர்வு செய்யப்பட்ட 2,04,281 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு, அதற்கான ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த ஒரு தகுதியான நபரும் விட்டுவிடக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் இத்திட்டத்தில் விடுபட்ட நபர்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கான வசதியினை ஏற்படுத்தினார்.

அதன்படி, இத்திட்டத்தில் மேல்முறையீடு செய்த பயனாளிகளின் விண்ணப்பங்கள் குழு அமைத்து, கள ஆய்வு செய்து அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு, தகுதியான மனுக்கள் என தேர்வு பெற்ற 14,542 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு, அதற்கான ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டது.

மேலும், மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் விசாரணை செய்யும் பணிகள் விரைவில் முடிவடைந்து, உரிமைத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பேசினார்.

முன்னதாக முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விழாவின் நேரலை நிகழ்வினை புதியதாக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுடன் அமர்ந்து நிகழ்ச்சியினை பார்வையிட்டனர்.

Tags:    

Similar News