நடமாடும் ஆஸ்பத்திரிகளை கொண்டு காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்துவோம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் சூரியகுமார் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் பெரும் தீக்காயம் அடைந்தார்.
- சிறுவனுக்கு 6 அறுவை சிகிச்சையினை அளித்து காப்பாற்றிய மருத்துவக்குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் சூரியகுமார் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் பெரும் தீக்காயம் அடைந்தார். அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, குணமடைந்துள்ளார். சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களை ஓமந்தூரார் பன்நோக்கு ஆஸ்பத்திரி கூட்டரங்கிற்கு வரவழைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டினார். சிறுவனிடம் நலம் விசாரித்தார்.பின்னர் அமைச்சர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறுவன் சூரியகுமார் குடும்பத்தினர் சென்னையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் விடுதியை வழங்கினேன். அவர்கள் அதில் கடந்த ஓராண்டு தங்கி சிகிச்சை பெற்றனர். சிறுவனுக்கு வலது காது, இடது, வலது கைகள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அடி வயிற்று ஒட்டுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது சிறுவன் தனது சுய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் அளவிற்கு உடல்நலம் தேறியிருக்கிறார். சிறுவனுக்கு மருத்துவக்குழுவினர் சிறப்பு சிகிச்சையினை அளித்திருந்தனர்.
சிறுவனுக்கு 6 அறுவை சிகிச்சையினை அளித்து காப்பாற்றிய மருத்துவக்குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த சிறுவன் சிகிச்சை முடிந்து வீடு திரும்ப இருக்கிறார்.
கொரோனா பாதிப்பு 36 ஆயிரம் என்ற அளவில் உச்சத்தை தொட்டிருந்த நேரத்தில், முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பாக செயல்பட்டது. அந்த எண்ணிக்கை தினமும் ஒன்று அல்லது இரண்டு அளவிற்கு குறைந்து வந்தது. பின்னர் முழுவதுமாக குறைத்தோம்.
மத்திய அரசின் சுகாதாரத்துறை நெறிமுறைகளின்படி, அனைவரும் தேவைக்கேற்ப முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சோப்பைக்கொண்டு அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்தநிலையில் இன்புளுயன்சா காய்ச்சலை தடுக்கும் வகையில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் 1,558 இடங்களில் அமைக்கப்பட்டு அதில் 2,663 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் முகாம்கள் நடமாடும் ஆஸ்பத்திரிகளை கொண்டு தொடர்ந்து நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் தேரணிராஜன், பேராசிரியர்கள் உடனிருந்தனர்.