பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை உயர்த்த அரசு பரிசீலிக்கும்- அமைச்சர் மனோ தங்கராஜ்
- ஆவின் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.
- தற்போது ஆவின் நிறுவனம் 45 லட்சம் லிட்டர் பாலை கையாளுவதற்கான திறனில் உள்ளது.
திருச்சி:
திருச்சி கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் இன்று பால் உற்பத்தியாளர்களுக்கு கடன்கள், மானிய உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கலெக்டர் மா.பிரதீப் குமார் தலைமை தாங்கினார். திருநாவுக்கரசர் எம்.பி. முன்னிலை வகித்தார்.
இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு 73 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பால் உற்பத்திக்கு முதுகெலும்பாக பால் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் தேவையானது அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் பால் உற்பத்தி குறையும் சூழல் இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இதே நிலை இருக்கிறது. ஆகவே பால் உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாய சூழல் இருக்கிறது.
ஆகவே தேவைகளை பூர்த்தி செய்ய பால் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆவின் நிறுவனத்தைப் பற்றி தெரியாமல் சிலர் களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் அதன் பலத்தையும், பலவீனத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆவின் நிறுவனம் என்பது, இரண்டு நோக்கங்களை கொண்டது. பால் உற்பத்தியாளர்களுக்கு நிலையான விலை வழங்க வேண்டியதும், வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் தரமான பாலை வழங்குவதும் தான் அந்த இரண்டு நோக்கங்கள்.
இந்த ஆவின் நிறுவனத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பால் உற்பத்தியாளர்களாகவும், 35 ஆயிரம் பணியாளர்களும், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களும் உள்ள ஒரு மிகப்பெரிய வலுவான அமைப்பாக உள்ளது. இந்த ஆவின் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.
அதன்படி பால் உற்பத்தியை பெருக்குவதற்கு 2 லட்சம் கறவை மாடுகள் வழங்குவதற்கும், பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான கடன் உதவிகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் மதுரையில் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.55 லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டது.
ஆவின் நிறுவனத்தை பொருத்தமட்டில் பால் உற்பத்தி அதிகமானாலும், குறைந்தாலும் ஒரு நிலையான விலையை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. தனியார் நிறுவனங்கள் அவ்வாறு வழங்குவதில்லை. தற்போது ஆவின் நிறுவனம் 45 லட்சம் லிட்டர் பாலை கையாளுவதற்கான திறனில் உள்ளது. அதனை 70 லட்சம் உயர்த்தி கையாளும் திறனாக மேம்படுத்த பணி தொடங்கியுள்ளது.
இந்த ஆவின் நிறுவனத்தை மெருகூட்ட பல தெளிவான, தீர்க்கமான தொலைநோக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிச்சயமாக வருங்காலத்தில் ஆவின் நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுவிடும். அதேபோன்று விவசாயிகளும் உற்பத்தி செலவீனம் அதிகரித்து விட்டதால் பாலின் கொள் முதல் விலையை உயர்த்த கேட்டிருக்கிறார்கள். இதனை முழுமையாக ஆய்வு செய்து விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க இந்த அரசு நிச்சயம் பரிசீலிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, கடந்த ஒரு மாதத்தில் பால் கொள்முதல் 28 லட்சம் லிட்டரில் இருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட் டுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த கேட்பது நியாயமானது. தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும். தனியார் நிறுவனத்தை கண்டு ஒரு அரசாங்கம் அச்சப்படாது. இருக்கும் கட்டமைப்புகளை மேம்படுத்தினாலே தனியார் நிறுவனங்களின் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்றார்.