இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் ஆறுதல்
- பலியானவர்க ளின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
- ரூ.3 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்கள்.
ஓசூர்,
ஓசூர் அருகே மாநில எல்லையில், பட்டாசு கடையில் நடந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி ஆகியோர் ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினர்.
அமைச்சர்கள் நேரில் ஆறுதல்
ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் பட்டாசு குடோன் விபத்தில் 14 பேர் பலியானார்கள். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் நேற்று காலை சென்னையில் இருந்து பெங்களூரு வந்தனர். அங்கிருந்து காரில் அத்திப்பள்ளி வந்த அவர்கள் பலியானவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பலியான 4பேரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்கள்.
அதே போல படுகாயம் அடைந்த ராஜேஷ், தினேஷ் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கி னார்கள். மொத்தம் ரூ.44 லட்சத்திற்கான நிவாரண தொகையை அமைச்சர்கள் வழங்கினார்கள். அப்போது மாவட்ட கலெக்டர் சரயு, எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்),டி.ராமச்சந்திரன் (தனி), ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா. உதவி கலெக்டர் சரண்யா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பேட்டி
பின்னர் அமைச்சர்மா.சுப்பிரமணியன் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் நானும் அமைச்சர் சக்கரபாணியும் இங்கு வந்து இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உள்ளோம். உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக தீபாவளி பண்டிகை காலங்களில் தற்காலிகமாக கடை கள் அமைத்து, அதற்கு தமிழகத்தை சேர்ந்த வர்களை அழைத்து வருவார்கள். இந்த விபத்தில் இறந்த வர்கள் பட்டாசு கடையில் வேலை செய்வதற்காக வந்தவர்கள் ஆவார்கள். இந்த விபத்தில் மொத்தம் 14 பேர் இறந்துள்ளனர். அவர்கள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். விபத்துக்கான காரணம் குறித்து அத்திப்பள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் சிலர் கோரிக்கை வைத்தனர்.