உள்ளூர் செய்திகள் (District)

நடைபாதையை குழி தோண்டி அடைத்த மர்ம நபர்கள்

Published On 2023-12-08 06:55 GMT   |   Update On 2023-12-08 06:55 GMT
  • போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் தவிப்பு
  • நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 தருமபுரி, 

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது அன்னை நகர், நல்லம்பள்ளியில் உள்ள சேலம் தர்மபுரி முக்கிய சாலையில் டாட்டா நகருக்கு எதிரே உள்ளது. இந்த பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியாரிடம் வீட்டு மனைகள் வாங்கி வீடு கட்டி குடியிருந்து வரும் நிலையில் 30 ஆண்டுகள் கழித்து குடியிருப்பு வீடுகளுக்கு சாலை வசதி வேண்டுமென்றால் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும்.

பணம் கொடுத்தால் மட்டுமே பஞ்சாயத்து நிர்வாகத்திடம் உங்களுக்கு உரிய சாலையை கிரயம் செய்து ஒப்படைக்க முடியும் என்று மிரட்டி வருவதாகவும் இது சம்பந்தமாக நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை முறையிட்டுள்ளனர்.

மேலும் இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் கழிவுநீர் செல்வதற்கு வழி இன்றி முக்கிய சாலையான சேலம் தருமபுரி சாலை ஓரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதேபோல் நல்லம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் இருந்து வடக்கு தெரு கொட்டாவூர் வரை சுமார் 1 கிலோ மீட்டருக்கு கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லாததால் இந்த முக்கிய சாலை ஓரத்தில் இருக்கும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவு நீர் சாலை ஓரத்தில் தேங்கி நின்று தொற்றுநோய் பரவும் அவல நிலை உள்ளது.

இந்த நிலையில் மர்ம நபர்கள் பொக்லிங் வைத்து குழிதோண்டி அன்னை நகருக்கு செல்லும் பாதையை அடைத்து விட்டதால் அன்னை நகரில் இருந்து செல்லும் பள்ளி குழந்தைகள் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அத்தியாவாசிய தேவைகளுக்காக பொருட்களை வாங்கி செல்லும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் செல்வதற்கு வழி இன்றி 2 நாட்களாக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்த நிலையில் நேற்று மாலை பஞ்சாயத்து நிர்வாகத்தையும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News