முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்களை விரைவில் முடிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
- அரசின் முன்னெடுப்பின் மூலம் தேசிய அளவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
- அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
'முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்' என்ற பெயரில் ஏற்கனவே இதுபோன்ற கூட்டம் 3 முறை நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
பல்வேறு துறை சார்ந்த திட்டங்களின் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள திட்டங்களை முத்திரை திட்டங்கள் என வகைப்படுத்தி விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2ம் கட்டமாக மேலும் சில திட்டங்களை இணைத்து இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. பல நல்ல திட்டங்களை அறிவித்து அவற்றின் செயலாக்கத்தை அரசு கண்காணித்து வருகிறது.
அரசின் முன்னெடுப்பின் மூலம் தேசிய அளவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. திட்டத்தின் வெற்றிக்கு பல துறைகளின் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம்.
சில திட்டங்களில் நிலவும் தொய்வு குறித்தும் ஆய்வுக்கூட்டத்தில் விவாதித்தோம். அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.