உள்ளூர் செய்திகள் (District)

ஜோலார்பேட்டை அருகே மாமியார் அடித்துக் கொலை- மருமகன் கைது

Published On 2024-09-23 05:59 GMT   |   Update On 2024-09-23 05:59 GMT
  • காஞ்சனா தனது மகள் வரலட்சுமியுடன் ஒன்றாக வசித்து வந்தார்.
  • குமரேசன் வரலட்சுமியை சரமாரியாக அடித்து உதைத்தார்.

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் அருகே உள்ள பட்டாளம்மன் கோவில் வட்டத்தை சேர்ந்தவர் முனிசாமி மனைவி காஞ்சனா (வயது 57).

இவரது மகள் வரலட்சுமிக்கும் (29), அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் குமரேசன் (32) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. தம்பதியினருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

காஞ்சனா தனது மகள் வரலட்சுமியுடன் ஒன்றாக வசித்து வந்தார்.

குமரேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு குமரேசன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குமரேசன் வரலட்சுமியை சரமாரியாக அடித்து உதைத்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சடைந்த காஞ்சனா, மருமகன் குமரேசனை தடுக்க முயற்சித்தார். அப்போது குமரேசன் வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து, காஞ்சனாவின் தலையில் ஓங்கி அடித்தார்.

வலி தாங்க முடியாமல் கதறியபடி ரத்த வெள்ளத்தில் காஞ்சனா சரிந்து விழுந்தார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள், காஞ்சனாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் காஞ்சனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வழக்கு பதிவு செய்து குமரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News