உள்ளூர் செய்திகள்

வெள்ளையன் மறைவுக்கு இரங்கல்: தூத்துக்குடி மாநகரில் கடைகள் அடைப்பு

Published On 2024-09-12 04:58 GMT   |   Update On 2024-09-12 04:59 GMT
  • மார்க்கெட்டில் பாதி அளவு கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
  • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கடைகள் திறக்கப்படவில்லை.

நெல்லை:

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் (வயது 76), உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் சென்னையில் மரணம் அடைந்தார்.

அவரது உடல் இன்று அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பிச்சி விளையில் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இதனையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. நெல்லை மாநகர பகுதியில் பாளை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்கத்தினர் கடைகளை அடைத்திருந்தனர்.

இதில் தலைவர் சால மோன், பொதுச்செயலாளர் பெரிய பெருமாள், பொருளாளர் இசக்கி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமான கடைக்காரர்கள் வெள்ளையன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். அதேநேரத்தில் மார்க்கெட்டில் பாதி அளவு கடைகள் திறக்கப்பட்டிருந்தன.


டவுனில் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் வாகையடி முனையில் வெள்ளையன் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் டவுன் வாகையடி முனையில் தொடங்கி டவுன், சேரன் மகாதேவி ரோடு, டவுன் வியாபாரிகள் நலச்சங்க அலுவலகம் வரை வியாபாரிகள் மவுன ஊர்வலம் சென்றனர். முன்னதாக அவர்கள், வெள்ளையன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

தூத்துக்குடி மாநகர பகுதியில் 90 சதவீதம் கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்தன. மாநகரில் தாளமுத்துநகர், புதுக்கோட்டை, முத்தையாபுரம், முள்ளக்காடு, திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதி சாலைகள் வெறிச்சோடியது. மாவட்டத்தில் ஆறுமுகநேரி, பழைய காயல், ஏரல், சாயர்புரம், நாசரேத், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களிலும் நூற்றுக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கடைகள் இன்று திறக்கப்படவில்லை.

Tags:    

Similar News