நள்ளிரவில் தினசரி காய்கறி மார்க்கெட்டை பூட்டி சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள்
- மார்க்கெட்டில் கடந்த 5 நாட்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
- வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் தினசரி காய்கறி மார்க்கெட் சந்தை பஸ் நிலையம் பின்புறம் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இதில் 170-க்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் தங்கள் தோட்டங்களில் விளை விக்கப்பட்ட காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தினசரி சந்தை வியாபாரிகளை வாரச்சந்தை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தைக்கு இடம் பெயரும் படி நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதனால் வியாபாரிகள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றமும் வியாபாரிகள் சங்கத்தினருக்கு முன்னுரிமை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் தினசரி மார்க்கெட் முன்பு அறிவிப்பு பிளக்ஸ் போர்டு வைத்தனர். மேலும் தினசரி மார்க்கெட்டில் கடந்த 5 நாட்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் 150-க்கும் மேற்பட்டோர் நகராட்சி ஆணையாளரிடம் 192 பேருக்கு நகராட்சி வாரச்சந்தையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் கடைகள் ஒதுக்கி தரக்கோரி மனு அளித்தனர். நகராட்சி ஆணையாளர் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்த நிலையில் நேற்று தினசரி வியாபாரிகளுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி நகராட்சி அதிகாரிகள் திடீரென நள்ளிரவு 11 மணி அளவில் வந்து தினசரி மார்க்கெட் சந்தையின் கேட்டை பூட்டு போட்டு சீல் வைத்தனர். அப்போது உள்ளே ஒரு பெண் உட்பட 5 விவசாயிகள் சிக்கிக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து கேட்டை பூட்டினாலும் கேட்டின் முன்பு உள்ள இடங்களில் வியாபாரிள் அதிகாலையில் காய்கறிகளை போட்டு வியாபாரம் செய்து விடுவார்கள் என்று அப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான செப்டிக் டேங்க் வாகனம், குப்பைகள் எடுத்துச் செல்லும் வாகனங்களை நிறுத்தி வைத்தனர்.
இதனையடுத்து அங்கு திரண்ட 100-க்கு மேற்பட்ட தினசரி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட காய்கறி மூட்டைகளை பஸ் நிலையம் வளாகத்தில் பஸ் செல்லும் வழியில் வைத்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் தினசரி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், புளியம்பட்டி இன்ஸ்பெக்டரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை டி.எஸ்.பி, முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. வியாபாரிகள் காய்கறி மூட்டைகள் சாலைகளில் போட்டு வைத்துள்ளதால் காய்கறிகள் வீணாகி உள்ளது. இதனால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இன்று காலை தினசரி வியாபாரிகள் சங்கத்தின், சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் மற்றும் வியாபாரிகள் தினசரி மார்க்கெட் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் வியாபாரிகளின் கோரிக்கைகளுக்காக புளியம்பட்டி பஸ் நிலையம் மற்றும் சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் உள்ள பகுதியில், கடைகள் அடைக்கப்பட்டு வருகிறது. இதனால் புளியம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும் தொடர்ந்து புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம், பவானிசாகர் இன்ஸ்பெக்டர் அன்னம், சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் வியாபாரிகள் கூறியவாறு பேச்சுவார்த்தையில் உடன்படவில்லை என்றால் காய்கறி மூட்டைகளுடன் தினசரி வியாபாரிகள் சாலை மறியல் செய்வதாக கூறுகின்றனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என சுமார் 150-க்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.