உள்ளூர் செய்திகள்

மருந்து கடை அதிபர் கொலை: கைதான 3 வாலிபர்களின் கை-காலில் 'மாவு கட்டு'

Published On 2024-01-02 10:49 GMT   |   Update On 2024-01-02 10:49 GMT
  • குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் ரவுடி சிலம்பரசன் தனது கூட்டாளிகள் மூலம் கொலை திட்டத்தை அரங்கேற்றி இருப்பது போலீசார் விசாரணையில் தெரிந்தது.
  • தப்பி ஓட முயன்ற போது அவர்கள் வழுக்கி விழுந்ததில் கை, காலில் முறிவு ஏற்பட்டது.

வண்டலூர்:

வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் வினோத் (வயது45). இவர் அதே பகுதியில் 2 மெடிக்கல் கடைகளை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வினோத்தை மர்ம கும்பல் சரமாரியா வெட்டி கொலை செய்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் நடத்திய விசாரணையில் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ரவுடியான சிலம்பு என்ற சிலம்பரசன் என்பவர் மாமூல் கேட்டு மிரட்டிய தகராறில் போலீசில் புகார் செய்ததால் வினோத் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் ரவுடி சிலம்பரசன் தனது கூட்டாளிகள் மூலம் கொலை திட்டத்தை அரங்கேற்றி இருப்பது போலீசார் விசாரணையில் தெரிந்தது.

இந்நிலையில் மண்ணிவாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த கொலையாளிகளான சிலம்பரசனின் உறவினர் சூர்யா, திருவேற்காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சரத் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அப்போது தப்பி ஓட முயன்ற போது அவர்கள் வழுக்கி விழுந்ததில் கை, காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து கைதான 3 பேருக்கும் கை, காலில் மாவு கட்டு போடப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பும் ரவுடி சிலம்பரசன் மீது கொடுத்த புகாரை திரும்ப பெற கோரி ரவுடி கும்பல் வினோத்தை மிரட்டி உள்ளது. இதன் தொடர்ச்சியாக வினோத் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

வினோத்குமாரை, ரவுடி சிலம்பரசன் மிரட்டியதாக ஆரம்பத்தில் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்த போதே போலீசார் ரவுடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்து இருந்தால் வினோத் கொலையை தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்று வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News