முத்தமிழ் முருகன் மாநாடு: கண்காட்சியை பார்வையிட 30-ந் தேதி வரை அனுமதி
- மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
- ஏராளமான பக்தர்கள் கண்டும் கேட்டும் ரசித்தனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று தொடங்கியது.
பழனி பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மடாதிபதிகள், ஆதீனங்கள், நீதியரசர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முப்பரிமான பாடலரங்கம், சிறப்பு புகைப்பட கண்காட்சி ஆகியவையும் இடம்பெற்றிருந்தது. குடவரைக்கோயில் போன்ற அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த இதனை ஏராளமான பக்தர்கள் கண்டும் கேட்டும் ரசித்தனர்.
முதல் அரங்கில் மாநாட்டு நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
முதல் நாள் மாநாட்டில் 300 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இன்று 800 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மொத்தம் 1300 ஆய்வறிக்கைகள் இறுதி செய்யப்பட்டு நீதியரசர் சுரேஷ்குமார் அவர்களுக்கான சான்றிதழை வழங்க உள்ளார்.
2ம் நாளான இன்று காலை திருவேல் இறைவன் தீந்தமிழர் இசையுடன் விழா தொடங்கியது. அதன் பின்பு முருகனும் பரதமும் என்ற தலைப்பில் வித்யா வாணி சுரேஷ் மற்றும் மகிதா சுரேசின் கலை நிகழ்ச்சி நடந்தது.
இசைத் தென்றல் சம்மந்தம் குருக்களின் திருப்புகழ் தேனிசை, டி.எம். சவுந்தர்ராஜனின் மகன் பால்ராஜின் இறை வணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி வரவேற்புரையாற்றினார்.
அமைச்சர் அர.சக்கரபாணி தொடக்க உரையாற்ற கோவை கவுமாரமடம் குமரகுரு சுவாமிகள் ஆசியுரையும், சத்திய வேல் முருகனார் சிறப்புரையும் ஆற்றினர்.
அதன் பின்பு மொரிசீயஸ் தமிழக கோவில்கள் கூட்டமைப்பு தலைவர் செங்கண்குமரா வாழ்த்துரை வழங்கினார். பின்னர் நீதியரசர் சுரேஷ்குமார் சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து கலைமாமணி தேச மங்கையர்கரசி, சுசித்ரா பாலசுப்பிரமணியம் குழுவினரின் யாமிருக்க பயமேன் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.
பின்னர் கர்நாடக பின்னணி பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினரின் முருகனை காண 1000 கண் வேண்டும் என்ற இசை நிகழ்ச்சியும், ஐதராபாத் முனைவர் சிவா குழுவினரின் கந்தன் காவடி சிந்து இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்னர் திருவாரூர் சுருட்டை சுர்ஜித் நாட்டுப்புற கலைக்குழுவினரின் நாட்டுப்புற கலையில் நற்றமிழ் முருகன் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
2-ம் நாள் நிகழ்ச்சியை காண அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாநாட்டு அரங்கு, கலை நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை கண்டு ரசித்ததுடன் அரங்கம் முன்பு நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
பக்தர்கள் அனைவருக்கும் அதிகாலை முதல் உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. மதியம் மற்றும் இரவு உணவுக்கும் ஊழியர்கள் தயார் நிலையில் அதற்கான பணிகளை செய்து வந்தனர். முன் பதிவு செய்து வந்த வெளிநாட்டு பக்தர்களுக்கு சிறப்பு அரங்கில் உணவு வழங்கப்பட்டது.
2-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று இரவு 8.30 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு மாநாட்டு நிறைவு விழா மற்றும் சிறந்த ஆய்வறிக்கைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
விருதுகளை நீதியரசர் வேல்முருகன் வழங்க உள்ளார். அதன் பின்பு மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. திருவாடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்குகிறார்.
இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சுகுமார் நன்றியுரையுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நிறைவு பெறுகிறது. மாநாட்டில் இடம்பெற்றுள்ள கண்காட்சி மற்றும் அரங்குகளை வருகிற 30-ந் தேதி வரை பக்தர்கள் பார்வையிடலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் மாநாட்டுக்கு இலவச அனுமதி என்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பார்வையிட்டனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் மலைக்கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.