தீபாவளி விடுமுறை நாட்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த ஏற்பாடு
- நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்களான 11, 12, 13-ந் தேதி ஆகிய 3 தினங்களுக்கு பாதுகாப்பு பணியை அதிகப்படுத்த உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்
- நாளொன்றுக்கு 700-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்களான 11, 12, 13-ந் தேதி ஆகிய 3 தினங்களுக்கு பாதுகாப்பு பணியை அதிகப்படுத்த உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாவட்டம் முழுவதும் பகல் மற்றும் இரவு ரோந்து மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோந்து செல்ல போலீசார் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க குற்றத்தடுப்பு போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதன்படி நாளொன்றுக்கு 700-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்து உள்ளார். என்றார்.