உள்ளூர் செய்திகள்

பஸ் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

தனியார் மினி பஸ் வயலுக்குள் கவிழ்ந்துமாணவிகள் உள்பட 15 பேர் காயம்

Published On 2023-10-11 09:07 GMT   |   Update On 2023-10-11 09:07 GMT
  • பரமத்திவேலூர் நோக்கி 15- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் சென்று கொண்டிருந்தது.
  • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் அருகில் இருந்த கோரை புற்கள் குவியலாக முளைத்திருந்த வயலுக்குள் கவிழ்ந்தது.

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா பொன்மலர் பாளையத்திலிருந்து மினி பஸ் ஒன்று பரமத்திவேலூர் நோக்கி 15- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் சென்று கொண்டிருந்தது. மினி பஸ் கொந்தளம் அருகே உள்ள கருக்கம்பாளையத்தில் சென்றபோது எதிரே சைக்கிளில் வந்தவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் மினி பஸ்சை இடது புறமாக திருப்பினார்.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் அருகில் இருந்த கோரை புற்கள் குவியலாக முளைத்திருந்த வயலுக்குள் கவிழ்ந்தது. இதனால் உள்ளே இருந்த பள்ளி மாணவிகள் மற்றும் பெரியவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் அடியில் மாட்டிக் கொண்டு அலறினர். அவர்களது அலறல் கேட்டு அங்கு விவசாயம் நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து பஸ்சில் மாட்டிக் கொண்டவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் மினி பஸ் டிரைவர் சந்தோஷ், பாண்டமங்கலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் பொன்மலர்பாளையத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி (17), தேசிகா (15), உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் டிரைவர் சந்தோஷ், மாணவி ஸ்ரீமதி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பார்மசி பயிலும் கொந்தளத்தை சேர்ந்த மகிமா(21), லலிதா(42), சின்னத்தம்பி(21), கனகா(26), ஜோதி(26), அண்ணாமலை(32), மற்றும் நாகம்மாள் (21) ஆகியோர் லேசான காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News