உள்ளூர் செய்திகள்

வங்கி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்

Published On 2023-07-14 07:10 GMT   |   Update On 2023-07-14 07:10 GMT
  • மகாராஷ்டிராவில் லாரியில் செல்லும் போது, கடந்த 7-ந் தேதி சாலை விபத்து ஏற்பட்டு, அவரது கால் துண்டாகி விட்டது.
  • மருத்துவ உதவிக்கு நகை அடமானம் வைக்க சென்ற தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக மகேஸ்வரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் தெரிவித்தனர்.

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோடு அடுத்த எலச்சிபாளையம் அருகே நல்லம்பாளையத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் சங்கர் (வயது 50). இவர் மகாராஷ்டிராவில் லாரியில் செல்லும் போது, கடந்த 7-ந் தேதி சாலை விபத்து ஏற்பட்டு, அவரது கால் துண்டாகி விட்டது.

இதையடுத்து மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் டிரைவர் சங்கரின் மருத்துவ செலவுக்காக, அவரது வீட்டில் உள்ள 3 பவுன் நகையை அடமானம் வைக்க அவரது மனைவி மகேஸ்வரி (40), எலச்சிப்பாளையம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், மகேஸ்வரி அடமானம் வைக்க கொடுத்த நகை போலி என்று கூறி, வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் வாங்க மறுத்து விட்டனர். மேலும் அவரை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மருத்துவ உதவிக்கு நகை அடமானம் வைக்க சென்ற தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக மகேஸ்வரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் முன்னிலையில் எலச்சிபாளையம் வங்கி முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 11 மணி முதல் மாலை 3.30 வரை போராட்டத்தில் ஈடுபட்டும், வங்கி நிர்வாகத்தினர் இதை கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், எலச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மெயின் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து எலச்சிபாளையம் போலீஸ் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் செல்லதுரை, கிராம நிர்வாக அலுவலர் சுகந்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணுவதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News