நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜனவரி மாதம் தேர்வு டீன் தகவல்
- அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதியதாக மருத்துவமனை 5 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
- காவிரி ஆற்றில் இருந்து 15 லட்சம் லிட்டா் நீரை குழாய் வழியாகக் கொண்டுவர வேண்டிய சூழல் உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதியதாக மருத்துவமனை 5 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்ட 7 ஆழ்துளைக் கிணறுகளிலும் நீராதாரம் இல்லாததால், காவிரி ஆற்றில் இருந்து 15 லட்சம் லிட்டா் நீரை குழாய் வழியாகக் கொண்டுவர வேண்டிய சூழல் உள்ளது.
இதற்காக ரூ.13 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனைக்கு நீரை கொண்டு வருவதற்கான வழித்தடத் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகிறது.
இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வருவதில் காலதாமதம் நீடிக்கிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் அனுமதி கிடைத்து விடும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அவ்வாறு அனுமதி கிடைத்தாலும் நீரைக் கொண்டு வருவதற்கான பணிகள் நிறைவடைய மேலும் 6 மாதங்களாகி விடும். தற்போது நாமக்கல் நகராட்சிக்கு கட்டணம் செலுத்தி 1½ லட்சம் லிட்டா் காவிரி நீரை மருத்துவமனை நிா்வாகம் பெற்று வருகிறது.
மாணவா்கள் உடற்கூறாய்வுப் பயிற்சிக்காக நாமக்கல்- மோகனூா் சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்வதற்கு, மருத்துவக் கல்லூரியில் பேருந்துகள் இல்லாததால், மாணவா்களை அழைத்துச் செல்ல அரசு பேருந்துகளை தற்காலிகமாக வாடகைக்கு எடுத்து நிா்வாகம் பயன்படுத்தி வருகிறது. மருத்துவக் கல்லூரி பயன்பாட்டுக்கென தனியாக பேருந்துகள் வழங்க வேண்டும் என்பது மாணவா்களின் கோரிக்கையாக உள்ளது.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கே.சாந்தாஅருள்மொழி கூறுகையில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி சென்ற ஆண்டு தொடங்கியபோது, 150 இடங்களை எதிா்பாா்த்த நிலையில் 100 இடங்களை இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கியது. அந்த இடங்கள் முழுமையாக நிரம்பி மாணவா்கள் படித்து வருகின்றனா். 2-ம் ஆண்டாக, மாணவா் சோ்க்கைக்குத் தயாராக உள்ளோம்.
மருத்துவக் கலந்தாய்வு முடிவடைந்து மாணவா்கள் சோ்வதற்கு அக்டோபா் அல்லது நவம்பா் மாதமாகி விடும். அதற்குள் தற்போது முதலாமாண்டு படித்து வரும் மாணவா்கள் பருவத் தோ்வுக்கு (செமஸ்டா்) தயாராகி விடுவா். ஜனவரியில் இத்தோ்வு நடைபெற வாய்ப்புள்ளது. முதலாம் ஆண்டு சேர உள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன என்றாா்.