போதைப்பொருட்கள்: ஆழியாறு சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனை
- சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
- சுற்றுலா வாகனங்களில் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப், கவியருவி, சின்னகல்லார் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
அப்போது அந்த வாகனங்கள் ஆழியார் சோதனைச்சாவடி மற்றும் டாப்சிலிப் வழித்தடத்தில் உள்ள சேத்துமடை சோதனைச்சாவடி ஆகிய பகுதிகளில் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
இதற்கிடையே சுற்றுலாப் பயணிகள் போல ஒருசிலர் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்களை சட்டத்துக்கு புறம்பாக வாகனங்களில் கொண்டு செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் வனச்சரகர் ஞானமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று ஆழியார் சோதனைச் சாவடியை கடந்து கவியருவி, வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மேலும் வனத்துறையின் பைரவா மோப்பநாய் மூலம் சுற்றுலா வாகனங்களில் ஏதேனும் போதைப் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்தும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஆழியார் சோதனைச்சாவடி வழியாக கவியருவி, வால்பாறை மட்டுமின்றி அட்டக்கட்டி, சின்னகல்லார், சோலையார் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். எனவே இந்த வழியாக செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகிறது.
இதற்கிடையே போதைப்பொருட்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான பொருட்கள் கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்க்கும் வகையில் ஆழியாறுக்கு வரும் சுற்றுலா வாகனங்களில் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
மேலும் வனப் பகுதிகளுக்குள் எவரேனும் அத்துமீறி செல்கின்றனரா என்பதையும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்து உள்ளனர்.