மத்திய பிரதேசத்தில் நடந்த விழாவில் தூத்துக்குடி மாநகராட்சிக்கான தேசிய விருது - மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கப்பட்டது
- தூத்துக்குடி மாநகராட்சியின் கல்வி சேவைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது பெருமை அளிக்கிறது.
- இந்திய அளவில் 100 பெரிய நகரங்களில் சீர்மிகு நகரத்திட்டங்களில் நடைபெற்ற பணிகளுக்கான 2022-ம் வருடத்திற்கான போட்டியில் இந்த விருதினை தூத்துக்குடி மாநகராட்சி பெற்றுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் சிறப்பான கல்வியினை வழங்கும் பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சி இந்திய அளவில் 3-வது பரிசுக்கு தேர்வாகியது.
இந்திய அளவில் 3-வது இடம்
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்திப் சிங் பூரியிடம் இருந்து, மாநகராட்சிக்கான விருதினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமாருடன் இணைந்து பெற்றுக்கொண்டார். இது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:-
தூத்துக்குடி மாநகராட்சி யின் கல்வி சேவைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது பெருமை அளிக்கிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், மாநகர மேயராக நான் பதவியேற்ற பின்பு மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
கல்விப் பணியில் சமூக பொருளாதார கட்டமைப்பின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் பாதுகாப்பான கட்டிடம், நூலகம், உணவகம் ,சீர்மிகு வகுப்பறை, நவீன இருக்கை வசதி, தூய்மையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை அடங்கிய சிறப்பான சூழலில் கையடக்க கணினி வசதியுடன் கல்வி கற்பிக்கப்படும் மகத்தான பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சி இந்திய அளவில் 3-வது இடம் பெற்று விருது மற்றும் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.
தேசிய விருது
இந்திய அளவில் 100 பெரிய நகரங்களில் சீர்மிகு நகரத்திட்டங்களில் நடைபெற்ற பணிகளுக்கான 2022-ம் வருடத்திற்கான போட்டியில் இந்த விருதினை தூத்துக்குடி மாநகராட்சி பெற்றுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க. துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாநகர மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.