பெண்ணாடம் அருகே பஞ்சாயத்து தலைவர் மகளிடம் நகை பறிப்பு
- பெண்ணாடம் அருகே பஞ்சாயத்து தலைவர் மகளிடம் நகைகளை திருடிச் சென்றனர்.
- வீட்டின் அருகில் இருந்த உறவுக்கார பெண்ணான காரையூர் ஊராட்சி மன்ற தலைவியின் மகள் கலையரசியும் அன்பழகன் வீட்டிற்கு வந்து வீட்டின் வரண்டாவில் படுத்து தூங்கி உள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே காரையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன். விவசாயி. இவர் தனது மனைவியுடன் நேற்று வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். நள்ளிரவு ஒரு மணி அளவில் அக் கிராமத்தில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டதின் காரணமாக அனைவரும் வீட்டின் வரண்டாவில் படுத்துள்ளனர். அப்போது வீட்டின் அருகில் இருந்த உறவுக்கார பெண்ணான காரையூர் ஊராட்சி மன்ற தலைவியின் மகள் கலையரசியும் அன்பழகன் வீட்டிற்கு வந்து வீட்டின் வரண்டாவில் படுத்து தூங்கி உள்ளார். நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே சென்று பீரோவில் இருந்த 13 சவரன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு வெளியே வரும் பொழுது வராண்டாவில் படுத்து இருந்த கலையரசியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி செயினை பரித்துள்ளனர்.
அப்போது தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட கலையரசி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வருவதை அறிந்த மர்ம நபர்கள் கலையரசியை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஊர் மக்கள் அவர்களை பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. நகைகளை திருடிச் சென்ற திருடர்கள் வீட்டின் அருகில் எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகளை அங்கிருந்து துணியால் மூடி மறைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து அன்பழகன் பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற பெண்ணாடம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கலையரசி கூறும்போது மர்ம நபர்கள் கால் சட்டை அணிந்தும், லுங்கியை கழுத்தில் போட்ட படியும் வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது .