உள்ளூர் செய்திகள்

செம்மேடு அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்

Published On 2024-06-26 08:00 GMT   |   Update On 2024-06-26 08:00 GMT
  • ருக்குமணி தனது வீட்டின் கதவை திறந்து வெளியில் வந்தார்.
  • யானை அவரை தும்பிக்கையால் தாக்கி அவரை அங்கிருந்த சாக்கடைக்குள் தூக்கி வீசியது.

பேரூர்:

கோவை மாவட்டம் செம்மேடு, அடிகளார் வீதியைச் சேர்ந்தவர் ருக்குமணி(வயது 70). தோட்ட வேலை பார்க்கிறார்.

இவரது வீட்டில் அருகே வசிப்பவர் ஈஸ்வரி. நேற்று இரவு 12 மணிக்கு மேல், ஈஸ்வரியின் வீட்டு கதவை யாரோ தட்டுவது போன்ற சத்தம் கேட்டது.

இதனால் அதிர்ச்சியான ருக்குமணி தனது வீட்டின் கதவை திறந்து வெளியில் வந்தார். அப்போது அங்கு ஈஸ்வரி வீட்டின் கதவை உடைத்து யானை ஒன்று அரிசியை சாப்பிட்டு கொண்டிருந்தது. இருட்டாக இருந்ததால் யானை தெரியவில்லை.

இதையடுத்து யாரோ ஒருவர் கதவை தட்டுகிறார் என நினைத்து ருக்குமணி, ஈஸ்வரியின் வீட்டின் அருகே சென்றார். அப்போது தான் அங்கு யானை நின்றிருந்தது தெரியவந்தது.

உடனடியாக ஓட முயற்சித்தார். ஆனால் அதற்குள் யானை அவரை தும்பிக்கையால் தாக்கி அவரை அங்கிருந்த சாக்கடைக்குள் தூக்கி வீசியது.

யானை நிற்பதை அறிந்த ஈஸ்வரி வீட்டுக்குள்ளேயே இருந்து விட்டார். இந்த நிலையில் வெளியில் நின்ற யானை ஆவேசமாக பிளறியபடி அங்கிருந்து நகர்ந்து சென்றது.

யானை சென்ற பின்னர் வீட்டை விட்டு வெளியில் வந்த ஈஸ்வரி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் யானை தாக்கி படுகாயம் அடைந்த ருக்குமணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தலை மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், தற்போது அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News