உள்ளூர் செய்திகள்

பாலக்கோடு அடுத்த தொல்லேக்காது நீர்வீழ்ச்சி அருகில் சின்னாறு ஆற்றை கடக்க முடியாமல் சிக்கிய ஒருவர் மீட்பு -2 பெண்கள் உட்பட 4 பேர் அக்கரையில் தவிப்பு

Published On 2022-09-06 08:35 GMT   |   Update On 2022-09-06 08:35 GMT
  • அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
  • குமார் என்பவரை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணை, கேசர்குழி அணை,உப்புபள்ளம் ஆறு உள்ளிட்டவைகளிலிருந்து அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தொல்லேக்காது நீர்வீழ்ச்சியில் அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் அருகில் உள்ள பெரியதோப்பு கிராமத்தை சேர்ந்த சின்னசாமி(48) இவரது மனைவி கெளரம்மாள் (45) மகன் குமார் (30) மற்றும் மகேஸ்வரி (33) ஆகியோர் 10 கறவை மாடு, ஆடுகளுடன் மேய்ச்சலுக்காக தொல்லேக்காது நீர்வீழ்ச்சி அருகே, ஆற்றின் அக்கரைக்கு மேய்ச்சலுக்காக சென்றுள்ளனர்.

தொடர்ந்து மாலையில் வீடு திரும்பும் போது திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, 3 அடியிலிருந்து தண்ணீர் 15 அடி வரை உயர்ந்தது. இதனால் வெளியே வர முடியாமல் தவித்தனர். இதனை தொடர்ந்து பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், 30 அடி நீளமுள்ள ஆற்றின் கரையின் இருபுறம் கயிறு கட்டி மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது நீண்ட நேரத்திற்கு பிறகு குமார் என்பவரை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

இரவு ஆனதால், மற்ற மூவரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் மேடான பகுதியில் மற்ற மூவரும் பாதுகாப்பாக இருந்து கொள்கிறோம் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மற்ற மூவரையும் மீட்கும் பணி இன்று தொடரும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். 

Tags:    

Similar News