நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்: கலெக்டர் எச்சரிக்கை
- இன்று மாலை முதல் நாளை நள்ளிரவு வரை கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.
- கடற்கரைகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் ஐதராபாத்தில் உள்ளது. தற்போது தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்காய்ஸ் எனப்படும் அந்த மையம் கடல் சீற்றம் குறித்த எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று மாலை முதல் நாளை நள்ளிரவு வரை நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் மிக அதிகமாக இருக்கும்.
இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு அலையும் 18 முதல் 22 நொடி நேரம் வரை இருக்கவும், 1.2 முதல் 2 மீட்டர் உயரம் வரை எழும்பவும் வாய்ப்புள்ளது. எனவே கடற்கரையோரம் வசிப்பவர்கள் போதிய முன் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திட வேண்டும். கடற்கரைகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.