உள்ளூர் செய்திகள் (District)

எளிமையாக வந்து பதவியேற்றுக் கொண்ட நெல்லை மேயர்

Published On 2024-08-10 08:04 GMT   |   Update On 2024-08-10 08:04 GMT
  • விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அலுவலகம் வந்தார்.
  • தி.மு.க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக ராமகிருஷ்ணன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

நெல்லை மாநகராட்சியின் 6-வது மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் கடந்த 5-ந்தேதி புதிய மேயருக்கான தேர்தல் நடத்தப்பட்டது. அதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கவுன்சிலர் ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் வெற்றி சான்றிதழுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இன்று காலை நெல்லை மாநகராட்சியின் 7-வது மேயராக ராமகிருஷ்ணன் பதவி ஏற்பு நிகழ்ச்சி நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ராஜாஜி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்காக மேயர் ராமகிருஷ்ணன் வழக்கமாக பயன்படுத்தும் தனது சைக்கிளில் டவுனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு வந்தார். வழியில் நெல்லையப்பர் கோவில் மற்றும் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அலுவலகம் வந்தார்.


அதன் பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் அவர் மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து மேயர் ராமகிருஷ்ணனின் தாயார் மரகதம்மாள் (வயது 95) அங்கி மற்றும் செங்கோலை தனது மகனுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, ராபர்ட் புரூஸ் எம்.பி., நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஆவுடையப்பன், அப்துல் வஹாப் எம்.எல்.ஏ, துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் தி.மு.க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மேயர் ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News