தூத்துக்குடியில் ரூ.87 கோடி மதிப்பீட்டில் புதிய வடிகால்கள் - மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
- தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-
புதிய வடிகால்கள்
தூத்துக்குடி மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் கிரேட் காட்டன் சாலை பார்டர் பஜாரில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு குத்தகை உரிமத்திற்கு பொது ஏலம் ஒப்பந்தம் கோரியவர்களுக்கு அனுமதி வழங்குதல், ஏலம் மற்றும் ஒப்பந்த புள்ளி கோராத கடைகளுக்கு மறு ஏலம் விடப்படுகிறது,
மாநகராட்சி முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர், ரஹ்மத் நகர், அய்யாசாமி காலனி,பொன் சுப்பையா நகர், லூர்தம்மாள் புரம் மற்றும் செயின்ட் மேரிஸ் காலனி ஆகிய பகுதிகளில் கடந்த 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் பெய்த பருவ மலையின் காரணமாக அதிக அளவு வெள்ள நீர் தேங்கி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
எனவே அந்தப் பகுதியில் மழை நீர் தேங்காமல் தடுக்கும் வகையில் ஆசிய மேம்பாட்டு வங்கி கடன் மானியம் மற்றும் உள்ளாட்சி பங்கு தொகையுடன் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 4 சிப்பங்களாக ரூ.87.01 கோடி மதிப்பீட்டில் 36.36 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி வடிகால் திட்ட பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி, கோட்டுராஜா, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் சோமசுந்தரி, ரிக்டா ஆர்தர் மச்சாது, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, சந்திரபோஸ், வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ்,சேகர், ராமச்சந்திரன், ஹரிகணேஷ்,ராஜபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.