உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் 3 இடங்களில் புதிய இணைப்பு சாலைகள்

Published On 2024-09-30 09:26 GMT   |   Update On 2024-09-30 09:26 GMT
  • திட்டத்துக்கான டெண்டரை மாநில நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது.
  • 2 ஆண்டுகளுக்குள் இந்த சாலை செயல்பாட்டுக்கு வரும்.

சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வருவதால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை நகரம் முழுவதும் புதிய இணைப்பு சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 3 இடங்களில் புதிய இணைப்பு சாலைகள் அமைக்கப்படுகின்றன.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மெட்ரோ ரெயில் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை முழுவதும் புதிய இணைப்பு சாலைகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பாடிக்குப்பம் மெயின் ரோடு - பிள்ளையார் கோவில் தெரு இடையே 900 மீட்டர் தொலைவுக்கு இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது.

இதன் மூலம் பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் நோக்கி செல்லும் வாகனங்கள், நெரிசல் மிகுந்த ஜவஹர்லால் நேரு சாலையை எளிதாக கடந்து செல்ல முடியும். இந்த சாலை விரிவாக்க திட்டத்தால், ரெயில் நகர் பாலம் வழியாக, பூந்தமல்லி உயர் மட்ட சாலைக்கு வாகன ஓட்டிகள் செல்ல முடியும்.

மற்றொரு இணைப்பு சாலையானது ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைகிறது. இந்த இணைப்பு சாலையானது, டி.ஜி.எஸ்.தினகரன் சாலையை, துர்காபாய் தேஷ்முக் சாலையுடன் இணைக்கும்.


இதன் காரணமாக மயிலாப்பூர், கிரீன்வேஸ் சாலை மற்றும் சாந்தோம் வழியாக செல்லும் வாகனங்கள் அடையாறு மற்றும் கிண்டியை மாற்று பாதையில் சென்று அடையலாம். ரூ.37.8 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டத்துக்கான டெண்டரை மாநில நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது.

இந்த 630 மீட்டர் இணைப்பு சாலை பணிகள் முடிந்ததும், துர்காபாய் தேஷ்முக் சாலை நடுவில் உள்ள தடுப்பு அகற்றப்பட்டு, ஒருவழி போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்படும்.

இந்த 2 இணைப்பு சாலை திட்டங்களையும் ஒரு வருடத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3-வது இணைப்பு சாலை, தற்போது பகுதி அளவில் பயன்பாட்டில் உள்ளது, இந்த சாலையானது பரங்கிமலை - மவுண்ட் பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தற்காலிகமாக செயல்பாட்டில் உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த சாலை முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News