தொழுதூர் அணைக்கட்டிலிருந்து உபரிநீர் வெளியேற்றம்
- தொடர்மழையால் தொழுதூர் அணைக்கட்டிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது
- கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டார்
பெரம்பலூர்,
வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொழுதூர் அணைக்கட்டு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலைஅருகே, பெரம்பலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.
அணைக்கட்டின் இடது கரையில் கால்வாய் வெட்டப்பட்டு, கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான வெலிங்டன் நீர்த்தேக்கத்துக்கும், வலது கரையில் உள்ள கால்வாய் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒகளுர், வடக்கலூர், வடக்கலூர் அக்ரஹாரம் ஆகிய 3 ஏரிகளுக்கும் வெள்ளநீர் திருப்பி விடப்படுகிறது.
தொழுதுார் அணைக்கட்டின் மூலம் மொத்தம் 26 ஏரிகளும், 10,468 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
தொடர் மழை காரணமாக பெரம்பலூர் மாவட்டம் வெள்ளாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், குறுக்கே கட்டப்பட்டுள்ள தொழுதூர் அணைக்கட்டிலிருந்தும், கீழக்குடிக்காடு அணைக்கட்டிலிருந்தும் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டார்.
வெள்ளாற்றிலிருந்து வரும் நீர் மூலம் கீழக்குடிகாடு அணைக்கட்டுக்கும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன்மூலம் அத்தியூர் ஏரி, கிழுமத்தூர் ஏரி, வயலூர் ஏரி மற்றும் கைப்பெரம்பலூர் ஏரி ஆகிய 4 ஏரிகளுக்கு நீர் செல்கிறது. இந்த ஏரிகள் மூலம் மொத்தம் 1,193 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் தினகரன் ஆகியோர் உடனிருந்தனர்.