உள்ளூர் செய்திகள்

மசினகுடியில் வனத்தையொட்டிய ரேசன் கடைக்கு சூரிய மின்வேலி பாதுகாப்பு

Published On 2024-08-26 06:59 GMT   |   Update On 2024-08-26 06:59 GMT
  • மசினகுடியில் இருந்து மாயாறு செல்லும் சாலையில் ரேசன் கடை உள்ளது.
  • வனப்பகுதியையொட்டி உள்ள அனைத்து ரேசன் கடைகளையும் பாதுகாக்க இந்த நடைமுறை ஏற்பாடு செய்யப்படும்.

ஊட்டி:

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வனத்தையொட்டிய கிராமங்களில் யானைகள் புகுந்து ரேசன் கடைகளை உடைத்து அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.

இதனால் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன், உணவு பொருட்கள் சேதம் அடைவதால் அதற்கான தொகையை ஊழியர்கள் ஈடு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இதனால் வனப்பகுதிகளையொட்டி உள்ள ரேசன் கடைகளில் பணிபுரிவதற்கு ஊழியர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

குறிப்பாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை ஆகிய இடங்களில் இந்த பாதிப்பு அதிகளவில் உள்ளது.

மசினகுடியில் இருந்து மாயாறு செல்லும் சாலையில் ரேசன் கடை உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நள்ளிரவில் ரேசன் கடையை உடைத்து அரிசி உள்ளிட்ட பொருட்களை காட்டு யானை தூக்கி வெளியே வீசியுள்ளது.

இதில் கடையின் கதவுகள் உள்பட பல்வேறு பொருட்களும் சேதமாகின. இதனால் அருகே உள்ள கட்டிடத்தில் பொருட்களை மாற்றி வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டன.

காட்டு யானை சேதப்படுத்திய ரேசன் கடை கட்டிடம் சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அப்பகுதிக்கு வந்த காட்டு யானை சீரமைக்கப்பட்ட ரேசன் கடையை மீண்டும் சேதப்படுத்தி ஷட்டரை உடைத்தது.

இதையடுத்து கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன் அறிவுரைப்படி மசினகுடி ரேசன் கடைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ரேசன் கடையை சுற்றிலும் சூரிய மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன் கூறியதாவது:-

மசினகுடி ரேசன் கடையை பாதுகாக்க சூரிய மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கம்பி வலை, இரும்பு கேட்ட, இரும்பு ஷட்டர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக ரேசன் கடைகளை யானைகள் சேதப்படுத்துவது தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதேபோல் வனப்பகுதியையொட்டி உள்ள அனைத்து ரேசன் கடைகளையும் பாதுகாக்க இந்த நடைமுறை ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News