நீலகிரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் தேதி மாற்றம்- கலெக்டர் அருணா தகவல்
- ஏற்கனவே 18, 19-ந்தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது
- 25, 26-ந்தேதிக்கு மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஊட்டி,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 1.1.2024-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தம்-2024, 27.10.2023 முதல் 9.12.2023 வரை நடைபெற உள்ளது.
இதன்படி 1.1.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 27.10.2023 முதல் 9.12.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும், இது தொடர்பாக ஏற்கனவே 4.11.2023, 5.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது, 18.11.2023-ஐ தமிழ்நாடு அரசு வேலை நாளாக அறிவித்ததைத் தொடர்ந்து, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த சிறப்பு முகாம்கள் 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாட்களில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
எனவே, அனைத்து பொதுமக்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல், பிழைத்திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றங்கள் மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கு வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த மற்றும் முகவரி மாற்றம் போன்றவற்றிற்கு ஆட்சேபனைகள் தெரிவிக்க கடைசி நாள் 9.12.2023 ஆகும். அனைத்து திருத்தங்களுக்கு பிறகு, எதிர்வரும் 5.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.