உள்ளூர் செய்திகள்

நிபா வைரஸ் பரவல்: கேரளாவுக்கு கல்வி சுற்றுலா செல்ல மாணவர்களுக்கு தடை

Published On 2024-07-25 06:22 GMT   |   Update On 2024-07-25 06:22 GMT
  • தமிழக எல்லையோர மாவட்டங்களில் உஷார் நடவடிக்கை.
  • மருத்துவக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவை:

கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 14 வயது சிறுவன் உயிரிழந்தான். அவனுடன் தொடர்பில் இருந்த 6 பேர் நிபா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதைத்தொடர்ந்து கேரளாவை ஒட்டிய தமிழக எல்லையோர மாவட்டங்களில் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சுகாதார மற்றும் மருத்துவக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் கோவையில் இருந்து கேரளாவுக்கு கல்வி சுற்றுலா செல்ல 2 தனியார் கல்லூரிகள் திட்டமிட்டு இருந்தன. இதுகுறித்து கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்விக்கு தெரியவந்தது.

தொடர்ந்து அவர் நிபா வைரஸ் பரவல் நீடிப்பதால் கேரளாவுக்கு கல்வி சுற்றுலா செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். தொடர்ந்து அந்த கல்லூரிகள் கேரளாவுக்கான கல்வி சுற்றுலாவை ரத்து செய்து விட்டன.

கோவையின் அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார்.

அந்த அறிவிப்பில், கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் இருப்பதால் மாணவ-மாணவிகளின் நலன்கருதி கோவை மண்டலத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகள் மாணவ-மாணவிகளை கேரளாவுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டுமென கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News