வடகிழக்கு பருவமழை எதிரொலி: கோமுகி அணையிலிருந்து 220 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
- சுமார் 10,860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
- வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி தீவிரமடைந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள கோமுகி அணையின் நீர்மட்டம் 46 அடியாகும். இந்த அணை யில் உள்ள ஆற்று பாசனம் மற்றும் முதன்மை கால்வாய் பாசனம் மூலம் சுமார் 10,860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையின்மூலம் சுமார் 78-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது கடந்த 10 ஆண்டுகளாக இந்த அணையில் நீர்பிடிப்பு பரப்பில் ஆக்கிரமிப்பு இருப்பதாலும், அணையின் நீர்பிடிப்பு பகுதி மண்ணால் தூர்ந்து போய் உள்ளதாலும் அதிகளவு நீரை மழை காலத்தில் சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் 46 அடியாக இருந்த போதிலும் மிக குறைந்த அளவு நீரை மட்டுமே சேமித்து வைக்க முடிகிறது. இதனால் ஒரு போக விளைச்சலுக்கு மட்டுமே பயன்படுகிறது. இந்நிலையில் கடந்த 29-ந் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கல்வராயன்மலை பகுதியில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
மேலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால் கோமுகி அணையின் நீர்மட்டம் தற்போது 42.2 அடியாக உயர்ந்துள்ளது. கோமுகி அணையின் நீர்மட்டம் 46 அடி என்ப தால் இன்னும் அணை நிரம்ப 3.8 அடி மட்டுமே உள்ளது. கோமுகி அணை முன்கூட்டியே நிரம்பி வருவதால் பருவ மழையின் போது அடிக்கடி அணை திறக்கவும், அதனால் கோமுகி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இன்று காலை நிலவரப்படி 360 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருப்பதால் 220 கனஅடி உபரி நீர் இன்று வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரை யோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள தால் பொதுமக்கள் அனை வரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.
மழையின் அளவு மி. மீட்டரில் பின்வருமாறு:- கள்ளக்குறிச்சியில் 20, தியாகதுருகம் 30, விருகாவூர் 25, சின்னசேலம் 12, அரியலூர் 38, கடுவனூர் 46, கலையநல்லூர் 28, கீழ்பாடி 7, மூரார்பாளையம் 37, மூங்கில்துறைப்பட்டு 27, ரிஷிவந்தியம் 15, சூளாங்குறிச்சி 46, வடசிறுவலூர் 32, மாடாம்பூணடி 9, மணலூரபேடடை 39, திருக்கோவிலூர் 21, திருப்பாலபந்தல் 15, வேங்கூர் 14, ஆதூர் 7, எறையூர் 6, ஊ.கீரனூர் 13 என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக கடுவனூர் மற்றும் சூளாங்குறிச்சியில் 46 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக எறையூரில் 6 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 487 மி.மீட்டராகவும், சராசரி 23.20 மி.மீட்டர் அளவாகவும் உள்ளது.