உள்ளூர் செய்திகள் (District)

கொள்ளையில் ஈடுபட்ட 5 பேரை படத்தில் காணலாம். 

பகலில் நோட்டமிட்டு இரவில் வேட்டையாடிய கும்பல் சிக்கியது

Published On 2022-12-28 10:03 GMT   |   Update On 2022-12-28 10:03 GMT
  • கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அதிகரித்து வந்துள்ளன.
  • கொள்ளை கும்பலை போலீசார் பிடித்தது பொதுமக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம், பொம்மிடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அதிகரித்து வந்துள்ளன. இது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில், போலீசார் கண்காணிப்பு பணியிலும், தேடுதல் பணியிலும் தீவிரம் காட்டினர்.

கடந்த 25 -ம் தேதி பொம்மிடி அருகே உள்ள பி.துரிஞ்சிப்பட்டி மின்வாரிய அலுவலகம் எதிரில் குடியிருக்கும் பூவிழி என்பவர் தனது தாயார் உடல்நிலை சரியில்லாததால் அவசரமாக சேலம் சென்று விட்டார். இவர் வீட்டில் ஜன்னல் அருகில் வைத்திருந்த செல்போன் திருடு போயிருந்தது.

அதேபோல 25-ம் தேதி பொம்மிடி அருகே உள்ள வேப்பாடி ஆறு மாரியம்மன் கோவில் பூசாரி உதயகுமார் வீட்டிலிருந்து பூட்டை உடைத்து 1300 ரூபாய் திருடு போயிருந்தது.

26 -ம் தேதி இளங்கோவன் என்ற கோட்டைமேடு ராஜகணபதி நகர் பகுதி சார்ந்த அரசு போக்குவரத்துக் கழகம் நடத்துனர் வீட்டிலிருந்த காமாட்சி விளக்கு, பித்தளை தட்டு, சொம்பு, பணம் ரூ.3200 போன்றவற்றை இவர் வெளியூர் சென்றிருந்தபோது திருடியுள்ளனர்.

மேலும் பில் பருத்தி கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் திருடவும் முயற்சி நடைபெற்றது. இந்த 5 திருட்டு சம்பவ வழக்குகளையும் பதிவு செய்த போலீசார் திருட்டு கும்பலை பிடிக்க அரூர் காவல்துறை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன் தலைமையில், பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பொம்மிடி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் சென்று வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்ததில் மேற்கண்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபர் என தெரிய வந்தது.

அதன் பேரில் அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்ததில் ஏற்காடு பகுதியை சார்ந்த கும்பலுக்கும் இந்த திருட்டு வழக்கில் தொடர்புடையது தெரிய வந்தது. இவர்களில் பெரியான் (வயது37), கார்த்திக் (21), கோவிந்தராஜ் (35), மணி (20), சக்திவேல் (26) உள்ளிட்ட 5 பேரை போலீசார் ஏற்காடு சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து 7 பவுன் நகை, குத்து விளக்கு, செல்போன், பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் திருடுவதற்கு பயன்படுத்திய கத்தி, ராடு, ஸ்குரு, முகமூடி மற்றும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் கடந்த இரண்டு மாத காலமாக இரு சக்கர வாகனத்தில் ஏற்காட்டில் இருந்து வந்து பொம்மிடி பகுதியில் தனியாக இருக்கும் வீடுகள், தனியாக வசிக்கும் வயதானவர்கள் போன்றவர்களை பகல் நேரத்தில் கண்காணித்து அப்பகுதியில் உள்ள மதுபான கடைகளில் குடித்துவிட்டு இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்து ஏற்காடு தப்பி சென்றுள்ளனர்.

இரண்டு மாத காலத்திற்குள் இந்த கொள்ளை கும்பலை போலீசார் பிடித்தது பொதுமக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News