உள்ளூர் செய்திகள்

ஆபாச வீடியோ, ஆடியோ வழக்கு: தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் அதிரடி கைது

Published On 2024-06-11 05:04 GMT   |   Update On 2024-06-11 06:03 GMT
  • 4 பேர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை.
  • தனிப்படை போலீசார் வாரணாசிக்கு சென்று செந்திலை கைது செய்தனர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரியா சாமிகள் தொடர்பான ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி சிலர் பணம் கேட்டு ஆதீனத்தை மிரட்டினர்.

இதுகுறித்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் வினோத், ஆதீனகர்த்தரின் முன்னாள் உதவியாளர் செந்தில், சீர்காழி பா.ஜனதா முன்னாள் ஒன்றிய செயலாளர் விக்னேஷ், செம்பனார்கோவில் தனியார் கல்வி நிறுவனங்களில் தாளாளர் குடியரசு, செம்பனார்கோ வில் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் விஜயகுமார், செய்யூர் அ.தி.மு.க. பிரமுகர் ஜெயச்சந்திரன், மயிலாடுதுறை பா.ஜனதா மாவட்ட செயலாளர் அகோரம், பந்தநல்லூர் சீனிவாஸ், திருச்சியை சேர்ந்த பிரபாகர் ஆகிய 9 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த வழக்கில் வினோத், விக்னேஷ், குடியரசு, ஸ்ரீனிவாஸ், அகோரம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அதில் 4 பேர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் திருவையாறு செந்தில், மயிலாடுதுறை மாவட்ட அமர்வு கோர்ட்டில் முதல் முறையாக முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது செய்யப்படாததால் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும், செந்திலை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதால் அவரது முன்ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பு வக்கீல் ராம.சேயோன் வாதாடினர்.

இதைத்தொடர்ந்து, ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்திலின் முன்ஜாமீன் மனுவை தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை போலீசார் தொடர் விசாரணை நடத்தினர். விசாரணையில் தருமபுர ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் திருவையாறு செந்தில், உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசியில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை சிறப்பு தனிப்படை போலீசார் வாரணாசிக்கு சென்று செந்திலை கைது செய்தனர். பின்னர், அவர் மயிலாடுதுறைக்கு அழைத்து வரப்பட்டார். செந்தில் கைதை தொடர்ந்து தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கு சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Tags:    

Similar News