உள்ளூர் செய்திகள் (District)

ஒடிஷா வாலிபர் கொலை- கைதான தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2022-11-20 07:53 GMT   |   Update On 2022-11-20 07:53 GMT
  • கொலை வழக்கில் எர்னஸ்ட் பால் என்பவரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
  • இதுவரை 251 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி:

புதுக்கோட்டை பாத்திமாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியை சேர்ந்த துஷாபந்த் பெஹரா (வயது25) என்பவரை அடித்து கொலை செய்த வழக்கில் மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் பகுதியை சேர்ந்த எர்னஸ்ட் பால் (42) என்பவரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரி எர்னஸ்ட் பால் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதை அவர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் செந்தில்ராஜ், மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் பகுதியை சேர்ந்த எர்னஸ்ட் பால் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தர விட்டார். அவரது உத்தரவின் பேரில் எர்னஸ்ட் பாலை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 42 பேர் உட்பட 251 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News