கன்னியாகுமரியில் போலீசாரின் எச்சரிக்கையை மீறி நடந்த படகு போட்டி- நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசனை
- நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், போட்டியை நடத்துவதில் உறுதியாக இருந்தனர்.
- போட்டி அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
நாம் தமிழர் கட்சி சார்பில் கன்னியாகுமரி முதல் நெல்லை மாவட்டம் இடிந்தகரை வரை இன்று கடலில் படகு போட்டி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
கடலில் காற்றும், சீற்றமும் காணப்பட்டதால் படகு போட்டி நடத்த கூடாது என்று கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தெரிவித்தனர். மேலும் கன்னியாகுமரி போலீசாரும் கடற்கரைக்கு சென்று படகு போட்டி நடத்த கூடாது என்று கூறினர்.
ஆனால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், போட்டியை நடத்துவதில் உறுதியாக இருந்தனர். இதனால் போலீசாருக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் போலீசாரின் தடையை மீறி கடலில் படகு போட்டி நடந்தது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் போலீசாரின் உத்தரவை மீறி கடலில் படகு போட்டி நடத்தியது பற்றி போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
இது தொடர்பாக போட்டி அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.