உள்ளூர் செய்திகள்

குழந்தை விற்பனை விவகாரம்- அரசு ஆஸ்பத்திரி, பெண் டாக்டரின் கிளீனிக்கில் அதிகாரிகள் அதிரடி சோதனை

Published On 2024-07-17 06:30 GMT   |   Update On 2024-07-17 06:30 GMT
  • சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் அனுராதா கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
  • கிளினிக் உள்ளிட்ட பகுதியில் சீல் வைக்கப்பட்ட அறைகளை சீலை அகற்றி அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

திருச்செங்கோடு:

திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் மகப்பேறு அரசு டாக்டராக பணியாற்றி வந்தவர் அனுராதா.

இந்த நிலையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக அனுராதா மற்றும் புரோக்கர்கள் உள்பட 3 பேர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து நாலு கால் மண்டபம் அருகே இருந்த தமிழரசு மருத்துவமனையில் டாக்டர் அனுராதா பயன்படுத்தி வந்த அறைகள் மற்றும் நாமக்கல் ரோட்டில் உள்ள அவருக்கு சொந்தமான மருத்துவமனை மற்றும் கிளினீக் ஆகியவை அரசு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் அனுராதா கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட துணை இயக்குனர் திலகம் தலைமையில் நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட மருத்துவத் துறை அதிகாரிகள் அனுராதா பணியாற்றி வந்த திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மற்றும் அனுராதாவுக்கு சொந்தமான நாமக்கல் ரோட்டில் உள்ள கிளினிக் உள்ளிட்ட பகுதியில் சீல் வைக்கப்பட்ட அறைகளை சீலை அகற்றி அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். சோதனை நிறைவடைந்த பிறகு மீண்டும் சீல் வைக்கப்பட்டது.

இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்ன? குழந்தை விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? மேலும் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த கேள்விகளுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

தற்போது குழந்தை விற்பனை விவகார வழக்கை மீண்டும் அதிகாரிகள் கையில் எடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News