பொன்னேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை- அதிகாரிகள் எச்சரிக்கை
- போக்குவதற்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களுக்கு அபராத தொகை விதிக்க வேண்டும்.
- பொன்னேரி நகராட்சியில் முக்கியமான வீதிகளில் பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன.
பொன்னேரி:
பொன்னேரி பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து பல மணி நேரமாக பாதிக்கப்பட்ட நிலையில் 2 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் வரிசையில் நின்றன.
இதனால் விபத்து உயிர் இழப்பு, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் செல்ல வழி இல்லாமல் அவதிப்பட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில் நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் வியாபாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சாலை ஓர நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சாலையில் குறிக்கப்பட்ட அளவிற்கு கயிறுகள் கட்டி அளவீடு செய்யவும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும், போக்குவதற்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களுக்கு அபராத தொகை விதிக்க வேண்டும் எனவும், பள்ளி கல்லூரி நேரங்களில் போலீசார் வாகன நெரிசலை சரிபடுத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
பொன்னேரி நகராட்சியில் முக்கியமான வீதிகளில் பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன எனவும் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் அனுமதி பெற்று ஒரு நாள் மட்டும் வைத்துக் கொள்ளவும் மீறினால் நகராட்சி ஊழியர்களைக் கொண்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
பொன்னேரி தேரடி தெருவில் கடைகளில் நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை ஆய்வு செய்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தால் அபராததொகை மற்றும் கடைகள் அகற்றப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டு மீறினால் நகராட்சி நிர்வாகம் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.