உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரத்தில் அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி காயம்-சிகிச்சைக்கு அழைத்து சென்ற பெண் போலீசுக்கு குவியும் பாராட்டுக்கள்

Published On 2023-07-30 08:50 GMT   |   Update On 2023-07-30 08:50 GMT
  • அரசு பஸ் ஒன்று பாவூர்சத்திரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
  • டிரைவர் பஸ்சை நிறுத்தும் முன்பே மூதாட்டி இறங்கியதால் தவறி விழுந்தார்.

தென்காசி:

தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம், ஆலங்குளம் வழியாக நெல்லை செல்லும் அரசு பஸ் ஒன்று பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நெல்லைக்கு புறப்பட்டது.

இந்நிலையில் நெல்லை- தென்காசி 4 வழிச்சாலையில் பாவூர்சத்திரம் பிரதான பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த பஸ்சில் வழி தவறி ஏறிய சுமார் 80 வயது உள்ள மூதாட்டி ஒருவர் அவசரமாக இறங்குவதற்கு முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் பஸ் டிரைவர் நிறுத்துவதற்கு முன்பே அந்த மூதாட்டி பதட்டத்தில் இறங்கியதால் தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. உடனே பஸ் நிறுத்தப்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு தலையில் அடிபட்டதால் தனது பெயர், அவரது ஊர் மற்றும் உறவினர்கள் பெயரை சொல்ல முடியாமல் திணறினார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார் அந்த மூதாட்டியை 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மூலம் சிகிச்சை கொடுத்து பின்னர் அவரை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். ஆம்பு லன்சில் ஏறுவதற்கு மறுத்த மூதாட்டியை பெண் போலீஸ் ஒருவர் கரிசனையுடன் பேச்சு கொடுத்து அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காகவும், மூதாட்டியின் உறவினர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியாக பார்க்கப்பட்டது. அந்த பெண் போலீசுக்கு பாராட்டுகளும் குவிகிறது. இந்நிலையில் மூதாட்டியின் சொந்த ஊர் மடத்தூர் என்பது தெரியவந்தது.

Tags:    

Similar News