கோவையில் 9-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்
- 3 விழாக்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
- 6 அடி உயரத்தில் கருணாநிதியின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சூலூர்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 9-ந் தேதி கோவைக்கு வருகிறார். அன்றைய தினம் கோவையில் நடைபெறும் 3 விழாக்களில் அவர் பங்கேற்கிறார்.
கோவை அரசு கலைக்கல்லூரி மைதா னத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து காணொலி வாயிலாக பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.
பின்னர் உக்கடம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடக்கும் விழாவில் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.
அதன்பின் கோவை கருமத்தம்பட்டிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் 6 அடி உயரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள கட்டிட வளாகத்தில் கலைஞர் அறிவுசார் நூலகம், அதன் எதிரே 106 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பமும் அமைக்கப்பட்டு உள்ளது. கருணாநிதி சிலை, நூலகம், கொடிக்கம்பம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையால் கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு தயாராகி வருகிறார்கள்.