உள்ளூர் செய்திகள் (District)

செல்பி மோகத்தால் ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் விபத்தில் சிக்கும் சுற்றுலா பயணிகள்

Published On 2023-05-05 09:13 GMT   |   Update On 2023-05-05 09:13 GMT
  • சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் படையெடுத்து வருகின்றனர்
  • நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஊட்டி,

ஊட்டிக்கு கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாகவும், கோவை உள்பட தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து குன்னூர், கோத்தகிரி சாலை கூடலூர், கல்லட்டி. சாலை வழியாகவும் வாகனங்கள் சேர்ந்து வருகின்றன. இதனால் ஊட்டி-குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் படையெடுத்து வருவதால் குன்னூர் சாலை ஒரு வழி பாதையாக மாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

தற்போது சீசன் தொடங்கி இருப்பதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பர்லியாறு, காட்டேரி லாஸ் நீர்வீழ்ச்சி உள்பட பல்வேறு இடங்களில் சாலையோரம் நின்று இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கின்றனர். அப்போது செல்பி மற்றும் புகைப்படம் எடுக்கும் ஆசையால், குறுகலான சாலை இருக்கும் ஒரு சில இடங்களிலும் நின்று கொள்கின்றனர். இதனால் விபத்து அபாயம் இருக்கிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை செல்லும் சாலை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் வாகன போக்கு வரத்து அதிகம் என்பதால் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

அப்படி இருக்கும் சூழ்நிலையில் செல்பி மற்றும் புகைப்படம் எடுப்பதற்காக லாஸ் நீர்வீழ்ச்சி பாலத்தில் சுற்றுலா பயணிகள் அவ்வப்போது நிற்கின்றனர். இதனால் அவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.

அதேபோல் லாஸ்ட் நீர்வீழ்ச்சியில் எப்போதும் தண்ணீர் அதிகமாக இருக்கும் என்பதால் தவறி விழுந்தால் உயிரிழப்பு ஏற்படலாம். முதலில் சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் வனவிலங்கு நடமாட்டம் இருக்கக்கூடிய பகுதிகளிலும் வாகனங்களை நிறுத்துகின்றனர். வனவிலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படாமல் இருக்க வேகத்தடை அமைத்தும் வேகமாக செல்கின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்தி மேற்கண்ட பிரச்சினைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News