நத்தம் அருகே திருட்டு வழக்கில் 2 வாலிபர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை
- மோட்டார் சைக்கிளையும், செல்போனையும் திருடிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- இவ்வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கும் தலா 1 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டியை சேர்ந்தவர் சின்ராசு (வயது 32). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது ஊரில் நாடகம் பார்த்து விட்டு வீட்டில் தூங்கி கொண்டி ருந்தார். அப்போது அவரது வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கிளையும், அவரது செல்போனையும் 2 பேர் திருடிச் சென்று விட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசில் சின்ராசு புகார் செய்தார். அதன் பேரில் நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து லிங்கவாடியை சேர்ந்த மாணிக்கம் (34), ரெட்டியபட்டியை சேர்ந்த பாவம் (33) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் புலன் விசாரணை செய்து வந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி உதயசூரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதில் குற்றவாளிகள் இருவருக்கும் தலா 1 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.